முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இதனிடையே,
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், தற்போதைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கையடுத்து முல்லைப் பெரியாறு அணை தொடர்பான நிலை அறிக்கை ஒன்றை மத்திய நீர்வள ஆணையமும், முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழுவும் கடந்த ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. மேலும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக மேலும் ஒரு மறுஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளதாகவும், மறு ஆய்வு தேவையில்லை என்றும், ஒருவேளை மறு ஆய்வு செய்வதாக இருந்தால், அணையின் எஞ்சிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே மறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று தொடங்கவிருந்த நிலையில், கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய ஆவணங்களை படிக்க அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில், இன்று விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்ற நிதிபதி வழக்கு விசாரணை இன்று ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.