சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை மத்திய அரசால் உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து சலுகையில் விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல், விலை குறைய கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விலை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ஒரு சிலிண்டர் 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவ்டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.