ஹைதராபாத் காந்தி நகர் போய்குடா பகுதியில் பழைய பொருள் கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. கிடங்கின் மாடியில் 12 தொழிலாளர்கள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கிடங்கில் காலி மதுபாட்டில்கள், அட்டைகள், மரக்கட்டைகள் அதிகளவு இருந்ததால் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதில் வெளியேற முடியாமல் கிடங்கில் சிக்கிய 11 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 5 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தின் போது ஒரே ஒரு தொழிலாளி மட்டும் படு காயங்களுடன் தப்பினார். அவருக்கு மருத்துவமைனயில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.