சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6ம் தேதி காலை 10மணியளவில் தொடங்கும் என்றும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 30ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறினார். மேலும், கூட்டத்தொடரின் அனைத்து நாட்களுமே கேள்வி நேரம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தில் மீண்டும் பேரவை செயல்படுமா? என்ற கேள்விக்கு, எடுத்தோம் , கவிழ்த்தோம் என எதையும் செய்பவர் அல்ல தமிழ்நாடு முதலமைச்சர் என கூறிய அவர், எதை செய்தாலும் தீர ஆராய்ந்து தேவையான அளவிற்கு கலந்து ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் எனவும் விளக்கமளித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் தன்னை புகழ்ந்து பேசுவதை ரசித்தோ, எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டார் என கூறிய அவர், நேற்று எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம் என்பது எனது கருத்து எனவும், ஆரோகியமான முறையில் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என விரும்புபவர் முதலமைச்சர் என்றும் கூறினார்.நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார் என பத்திரிக்கை செய்தியை பார்த்ததாக தெரிவித்த அவர், நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது