இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய தூதரகம் இலங்கை அரசுடன் தொடர்பில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகள் அல்லது வேறு ஏதேனும் வகையில் உதவிகள் செய்ய மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? மேலும் இலங்கையில் உள்ள இந்திய வர்த்தகர்கள் மற்றும் இந்திய மக்களின் நிலை குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்து உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், அண்டை நாடுகளுடனான நட்பு மற்றும் பரஸ்பர உறவை வலுப்படுத்தும் வகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ள இலங்கைக்கு பல்வேறு வகைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா அரசு இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாகவும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்குவதற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசு கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ச்சியாக இலங்கை அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகத்தின் தகவலின் படி இலங்கையில் கிட்டத்தட்ட 4,500 இந்திய பிரஜைகள் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com