மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம் எப்படி?

மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம் எப்படி?

முன்பதிவு செய்யும் டிக்கெட்களில் உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடன் பயணம் செய்யும் நபர்களின் பெயர்களை இந்திய ரயில்வே அச்சிட்டு வழங்குகிறது. ரயில் பெட்டிகள் மற்றும் சார்ட்களில் கூட, எந்த இருக்கையில் எந்த பயணி பயணிக்கிறார் என்ற தகவல்கள் வரை இப்படி தான் அமைக்கப்படுகிறது. இப்படிப் பெயரிடப்பட்ட உங்களுடைய டிக்கெட்களில் இறுதி நேரத்தில் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபர் பயணிக்க முடியுமா என்று கேட்டால், முடியும் என்கிறது இந்திய ரயில்வேவின் விதிகள். சில நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் செய்ய முடியும்.

இந்த சிறப்பு வசதியை இந்திய ரயில்வே நீண்ட காலமாக வழங்கி வருகிறது. ஆனால், பெரும்பாலானோர் இந்த வசதி பற்றி அறிந்திருக்கவில்லை என்பதனால் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். சரி, இந்திய ரயில்வேவின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் மாற்றுப் பெயருக்கான கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் துண்டிக்கப்பட்டு, யார் பயணிக்க இருக்கிறார்களோ அவர்களின் பெயரில் டிக்கெட்டில் மாற்றப்பட்டு, அந்த நபர் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார். பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது கடமைக்காகச் செல்கிறார் என்றால், அவர் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இந்த கோரிக்கையைக் கோரலாம்.

இந்த டிக்கெட் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த நபரின் பெயருக்கு மாற்றப்படும். கோரிக்கை வைக்கப்படும் காரணத்தையும் நாம் கூறவேண்டும். திருமணத்திற்குச் செல்பவர்களுக்கு இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள் 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும். இந்திய ரயில்வேவின் விதிப் படி, உங்கள் டிக்கெட்டுகளை மாற்றம் செய்வதற்கான அனுமதி ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

அதாவது, ஒரு பயணி தனது பயண டிக்கெட்டை ஒரு முறை மட்டுமே வேறு நபருக்கு மாற்றி அமைக்க முடியும். அதை மறுமுறை மாற்றம் செய்ய முடியாது.

உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு எப்படி மாற்றுவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

* டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

* அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டரைப் பார்வையிடவும்.

*டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்பட வேண்டுமோ அந்த நபரின் ஆதார் அல்லது வாக்கு அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.

*கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

அவ்வளவு தான், உங்களுடைய டிக்கெட்டை கேன்சல் செய்யாமல், வெறும் பெயர் மாற்றத்தை மட்டும் மேற்கொண்டு உங்களுடைய அதே டிக்கெட்டில் வேறு ஒருவரை இனி உங்களால் பயணம் செய்ய அனுமதிக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com