
“ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் என்னும் வேதம் இறக்கப்பட்டது. அது நன்மை, தீமையைப் பிரித்தறிவித்து, நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், அக்காலத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ரமலான் அல்லாத மற்ற நாள்களில் விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு நோன்பு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
மேலும் தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அவ்வாறே அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்”.
பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறவும், பாவங்களில் இருந்து தடுத்துக்கொள்ளவும் கேடயம் போல ரமலான் நோன்பு செயல்படுகிறது. எனவே சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை நாம் கடைப்பிடித்து எல்லாம் வல்ல இறைவனிடம், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவோம்.
மேலும் நோய்களில் இருந்து உடலையும், தீயவற்றில் இருந்து உள்ளத்தையும் காக்கும் கேடயமாக விளங்கும் நோன்பைக் கடைப்பிடித்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
எனவே அருள்மழை பொழியும் புனித ரமலான் மாதத்தில் முறையாக நோன்பு நோற்று, ஐந்து வேளை தொழுகை, தஹ்ஜத் மற்றும் தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்போம். நோன்பாளிகள் மட்டுமே செல்லக்கூடிய ‘ரய்யான்’ என்ற சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் காலம் என்பதால் இந்த நோன்பு காலத்தில் அதிகமதிகம் திருக்குர்ஆன் ஓதுவோம், தான தர்மங்கள் செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.