பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக திகழ்கிறது. முருகப்பெருமானின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. அவர் சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, ஆட்கொண்ட இடமாக திருச்செந்தூர் திருத்தலம் உள்ளது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஆறு நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. அசுர படைகள் வீழ்ந்த பின்னர் சூரபத்மன் மாமரமாக உருமாறினான். முருகப்பெருமான் தனது வேலினால் மா மரத்தை இரண்டாகப் பிளந்தார்.
மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன், சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார்.
அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவற்றில் ‘கந்தபுஷ்கரணி’ என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும். இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது.
பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உப்பு தன்மையே இல்லாத நன்னீராக இருக்கிறது. கந்தக் கடவுளின் அருளால் அமைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள்.