சென்னை அயனாவரம் வசந்தகார்டன் தெருவை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கணவர் ராகேஷிற்கு தெரியவந்துள்ளது. இந்த தொடர்பை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு ராகேஷ் ஸ்வேதாவிடம் எச்சரித்துள்ளார். ஆனால் ஸ்வேதா அதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் ஸ்வேதாவின் செல்போனிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு சத்திய கண்ணனுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
ராகேஷ், அவரது நண்பர் மற்றும் மனைவி ஸ்வேதாவுடன் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த சத்யாவிடம் தொடர்பை துண்டிக்குமாறு கூறி ராகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென ராகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் முதுகில் குத்தினார். இதனை தடுக்க வந்த சத்ய கண்ணன் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியோடினார்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், காயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.எம்.பி.டி போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.