
சிவசங்கர் பாபா ஜாமின் மனு விரைந்து விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை டிசம்பர் 1ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து சிவசங்கர் பாபா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜாமின் மனு மீது தமிழ்நாடு அரசின் பதிலை 2 வாரத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை கடந்த மாதம் வழக்கை ஒத்திவைத்தனர்.
ஆனால், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாத நிலையில், தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா சார்பில் அவரது வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வில் இன்று முறையிட்டார். அதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.