சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னையின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் மூலம் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனங்களை ரேஸில் ஈடுபடுவதற்கு ஏற்றார்போல் மாற்றியமைப்பது சட்ட விரோதமானது எனவும் அவ்வாறு மாற்றியமைக்கும் நபர்கள் தொடர்பான முழு விபரங்களை அனைத்து மெக்கானிக்குகளும் சென்னை காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.