தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் சசிகலா தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டாவது அணியும் உருவானது. இந்நேரத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதற்கும், அதிமுக கொடியை உபயோகிப்பதற்கும் அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதேநேரத்தில் டிடிவி தினகரன் தரப்பிலும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 50 கோடி ரூபாய் கொடுத்தால் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதாக கூறி முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாய் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 69 நாட்கள் திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரனின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை என்பதை மேற்கோள்காட்டி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில் சமீபத்தில் இடைத்தரகர் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தொடங்கியது. இந்நிலையில் இவ்வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏப்ரல் 8ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் விரைவில் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் டிடிவி தினகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் இவ்விவகாரத்தில் ஏற்கனவே டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆதாரங்களை திரட்டி உள்ள நிலையில் இவ்வழக்கு மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது