பாதுகாப்பு செயலியை பெண்கள் உடனேபதிவிறக்கம் செய்யுங்க- டிஜிபி

தமிழக காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள காவல் உதவி செயலியை அனைத்து பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் உடனே பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு செயலியை பெண்கள் உடனேபதிவிறக்கம் செய்யுங்க- டிஜிபி

தமிழக காவல்துறையில் குற்றச் சம்பவங்களை கண்டறிந்து, தண்டனை வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு புதிதாக காவல் உதவி என்ற பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பயன்படும் 60 அத்தியாவிசிய உதவிகள் அடங்கிய இச்செயலியை கடந்த 4 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிலையில் தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு வீடியோ பதிவு மூலம் காவல் உதவி செயலியை பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் உடனே பதிவிறக்கம் செய்து பயனடைய அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆபத்து காலங்களில் இந்த செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி வீடியோ கேமரா மூலம் சம்பவ இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக காட்டலாம் எனவும், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள் இந்த செயலி மூலம் உதவி கோரி தங்கள் பாதுகாப்பை இரவிலும் உறுதிபடுத்திக் கொள்ள முடியும் எனவும், தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து இளம் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை அவர்கள் கண்காணிக்கும் படியான வசதிகளையும் இந்த செயலி மூலம் காவல்துறை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 100, 101, 112 உள்ளிட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவி எண்களையும் இந்த செயலி மூலமாகவே அழைத்து உதவிகோர முடியும் எனவும், சாலை விதி மீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத் தொகையையும் இந்த செயலி மூலமே பொதுமக்கள் செலுத்திக்கொள்ள முடியும் எனவும் வீடியோ பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் பொதுமக்கள் அதிகம் ஏமாறும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களையும் சைபர் காவல் நிலையங்களைத் தேடி அலையாமல் இந்த செயலி மூலம் அழைத்து உதவி கோரி இழந்த பணத்தை மீட்க இயலும் எனவும், வெளியூருக்குச் செல்லும்போது தங்களுக்கோ அல்லது பிறருக்கோ ஏற்படும் விபத்து போன்ற அசம்பாவிதங்களைக் கூட இந்த செயலி மூலமே அழைத்து உதவி கோர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com