
வட கிழக்கு இந்திய பகுதியைச் சேர்ந்த பெண்ணான மதுமிதா பைடா சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அலுவல் நேரம் முடிந்து மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் ஈ.சி.ஆர் சீ ஷெல் அவென்யூ பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ரோந்துப் பணி காவலர் ஒருவர் மதுமிதாவிடம் அநாகரீகமாகப் பேசி கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறி நேற்று நள்ளிரவு மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தான் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த காவலர் மிகுந்த ஆவேசத்துடன் தங்களிடம் வந்து வட இந்தியாவில் போய் இதுபோல் 10 மணிக்கு மேல் ஊர் சுற்றுங்கள் என்றவாறு அநாகரீகமான முறையில் பேசியதாகவும், எதற்காக இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது மீண்டும் அதே அக்ரோஷத்துடன் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் ஒரு வட கிழக்கு இந்தியர் என்பதாலும், தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதாலும், வட இந்தியர்களை குறிப்பிட்டு தன்னை அநாகரீகமாக பேச வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட நேரம்தான் கடற்கரையில் அமர வேண்டும் என கால நேரம் வரையறுக்கப்படாத போது இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனவும் பொதுமக்களிடம் எவ்வாறு கன்னியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை முறையான பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மதிமிதா பைடாவின் இந்த பதிவிற்கு குறிப்பிட்ட காவலரின் கடுமையான மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்து தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சம்மந்தப்பட்ட ரோந்துப் பணி காவலர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.