இணையத்தள விளம்பரங்களை நம்பி பணத்தைக் கொடுத்து பொதுமக்கள் ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன. ஒருவர் பணத்தை இழந்துவிட்டால் அது சிறிய தொகையாக இருந்தாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். காரணம், மோசடி நபருக்கு எதாவது தீவிரவாத கும்பலோடு தொடர்பிருந்தால் பணத்தை இழந்தவருக்கும் சிக்கல்கள் வரலாம்' என்கின்றனர் சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
ஆயுதப்படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், டி.ஜி.பி ஒருவருக்கு கார் ஓட்டுராக உள்ளார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிய செல்போன் ஒன்றை வாங்குவதற்காக இணையத்தளங்களை அலசி ஆராய்ந்துள்ளார். அப்போது செகண்ட் ஹேண்ட் பொருள்களை விற்கும் பிரபல இணையத்தளத்தில் ஐபோன் விற்பனை தொடர்பான தகவலைப் பார்த்துள்ளார். அதில், மூன்று ஐபோன்களை 11,700 ரூபாய்க்கு விற்க உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இணையத்தளத்தில் விளம்பரம் செய்த நபரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். `பணத்தை அனுப்பினால் மட்டுமே பார்சல் மூலம் பொருளை அனுப்ப முடியும்' என அந்த நபர் கூறியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேசியதில் நம்பிக்கை ஏற்பட்டதால், அந்த நபரின் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், ஐந்து நாள்களுக்கு மேலாகியும் ஐபோன்கள் வரவில்லை. ஒருகட்டத்தில் மோசடி செய்த நபர், செல்போனை அணைத்துவிட்டதால் காவலர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதேபாணியில், கடந்த ஆண்டில் குறைந்த விலையில் ராணுவ பைக்குகளைத் தருவதாகவும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது.
ஒரு விலையுயர்ந்த பொருள், மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது என்றாலே அது நூறு சதவீதம் போலியானது என முடிவு செய்து கொள்ளலாம். ஒரு பொருளை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வாங்கினால் பிரச்னையில்லை. அதேநேரம், செகண்ட் ஹேண்ட் சேல்ஸில் எந்தப் பொருளையும் ஆராயாமல் வாங்கக் கூடாது' என்கிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர்.
செகண்ட் ஹேண்ட் சேல்ஸ் இணையத்தளங்களில் பொருள்களை வாங்கும்போது, `பணத்தை முன்கூட்டியே செலுத்துங்கள்' எனக் கூறினால் ஏமாந்துவிடக் கூடாது. அந்தப் பொருளை விற்பவரை நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். அவ்வாறு பேசுவதற்கு அவர்கள் விருப்பப்படவில்லையென்றால், அந்தப் பொருளே தேவையில்லை' என முடிவு செய்து கொள்ள வேண்டும். சிலர், பார்சலை வாங்கிவிட்டு பணத்தை அனுப்புங்கள்' என்று கூறுவார்கள்.
அந்த பார்சலை பெறுவதற்கு பணத்தைக் கட்ட வேண்டும். உள்ளே பிரித்துப் பார்த்தால் அதிர்ச்சியூட்டக் கூடிய பொருள்கள் இருக்கும். எனவே, யாராக இருந்தாலும் நேரில் பார்க்காமல் பணத்தைக் கொடுக்கக் கூடாது'' என்கிறார்.
பணத்தை மோசடி செய்ய நினைக்கும் நபர்கள், வாடிக்கையாளருக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் அடையாள அட்டைகளை அனுப்புவார்கள். சிலர் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி அதற்கான அடையாள அட்டையை அனுப்புவார்கள். உண்மையில் இந்த அடையாள அட்டைகள் யாருடையவை என்ற உண்மை தெரியப் போவதில்லை. இதனைப் புரிந்து கொள்ளாமல் பணம் செலுத்தி ஏமாறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் தவறு நடந்துவிட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று உடனே புகார் அளிக்க வேண்டும். ஆயிரம், இரண்டாயிரம் என சொற்ப பணத்தை இழந்தாலும் புகார் கொடுப்பதே சிறந்தது.
ஒருவேளை தீவிரவாத அமைப்புகளோடு மோசடி நபருக்குத் தொடர்பிருந்தது பின்னர் கண்டறியப்பட்டால், பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்க வேண்டிய நிலை வரலாம். அந்தநேரத்தில் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரம் இல்லையென்றால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார் அவர்.