சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரான பொன்ராஜ் கடந்த 3ஆம் தேதி இரவு நந்தம்பாக்கம் பட் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட முயன்றபோது வேகமாக வந்த அந்த ஆட்டோ உதவி ஆய்வாளர் பொன்ராஜை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. ஆட்டோ மோதியதில் கை, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் லேசான காயங்கள் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
. இந்நிலையில் உதவி ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் யார் என்பது குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜை மோதிச்சென்ற ஆட்டோவின் வாகன எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், லட்சுமி நகர் விரிவாக்கம், முதல் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 65 வயதான முதியவர் சுதர்சனம் தான் ஆட்டோவை ஓட்டி நிற்காமல் சென்றவர் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் முதியவர் சுதர்சனத்தை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் அவரை புனித தோமையார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ மோதியதில் காயமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜை அவரது வீட்டில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.