என்டிஆர் விஜய் சேதுபதி கே.ஜி.எஃப் இயக்குநர் இணையும் கூட்டணி

கே.ஜி.எஃப் இயக்குநர் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் இணையும் தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
என்டிஆர் விஜய் சேதுபதி கே.ஜி.எஃப் இயக்குநர் இணையும் கூட்டணி

கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து 'பாகுபலி' புகழ் பிரபாஸ் உடன் இணைந்தார். 'சலார்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதன்படி, 'சலார்' திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த முறை பிரபாஸ் அல்ல, தெலுங்கின் மற்றொரு முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் உடன் இணைகிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். முன்னதாகவே இதை ஜூனியர் என்டிஆர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்த நிலையில், அவரின் பிறந்தநாளில் அதிகாரபூர்வமாக இவர்களின் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு பின்பு ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே, இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இருக்கும் முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க படக்குழு விருப்பப்படுவதாகவும், அதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெலுங்கு முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் 'சைரா நரசிம்ம ரெட்டி', 'உபெண்ணா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் 'உபெண்ணா'வில் அவரின் நடிப்பு தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தெலுங்கு சினிமாக்களில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் வில்லனாக முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தற்போது ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com