தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்- வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்- வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 173 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தும் ஆயிரத்து 604 பேர் மட்டும் வாக்களித்தனர்.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. பின்னர் செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டன.

பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் பூச்சி முருகனும் நடிகர் கருணாசும் போட்டியிட்டனர்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும் பொதுச் செயலார் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.

பதவிக்காலம் முடிந்த செயற்குழு நியமியத்த தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனால் நடத்தப்பட்ட தேர்தல் சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

திட்டமிட்டப்படி 2019 ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைத்து பூட்டப்பட்டன.

இதற்கிடையில், ஜூன் 23-ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளின் தீர்ப்பும் பிப்ரவரி 23 ஆம் தேதி வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் எதிர்மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 3 வாரம் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்குகிறது.

இதில் 24 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர், ஒரு பொருளாளர் மற்றும் ஒரு பொதுச் செயலாளர் பதவிகள் என மொத்தம் 29 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

காலை 7 மணி முதல் முகவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரத்தொடங்குவார்கள். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஷாலும் சென்னை வரவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com