அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ நேற்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது.
கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது.
ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.
தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. மே 6 முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.