ஓரடி அகலத்தில் பழங்கால திரையரங்கு - அசத்தும் சினிமா ரசிகர்

ஓரடி அகலத்தில் பழங்கால திரையரங்கு - அசத்தும் சினிமா ரசிகர்
Digital

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் பழங்கால மாடலில் ஓரடி அகலத்தில் மினி தியேட்டர் ஒன்றை உருவாக்கி அதில் படங்களை பார்த்து ரசித்து வருகிறார்.

சீனாவில் தொடங்கி நாடோடியாய் ஊர் சுற்றி, விமானத்தில் உலகம் சுற்றி, இந்தியாவுக்குள் அழையா விருந்தாளியாய் நுழைந்து, ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக மக்களை ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று. கொரோனாவின் சைடு எஃபெக்ட்டான ஊரடங்கினால், பலரும் நான்கு சுவற்றுக்குள் சிவனே என்று முடங்கி கிடக்கின்றனர்.

குறிப்பாக, சினிமா ரசிகர்களுக்கு திரையரங்கம் சென்று படங்களைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் அதிகளவில் உள்ளது. என்னதான் வீடுகளில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் கால்களை நீட்டி படுத்துக்கொண்டே படங்களை பார்த்து ரசித்தாலும், திரையரங்கு சென்று மக்களோடு மக்களாக, கையில் பாப்கார்னுடன் படத்தைக் கொரிப்பது தனி சுகம்தான்.

Digital

அந்த வகையில், புதுச்சேரி காந்திநகரில், தனது வீட்டில் ஓரடி அகலத்தில் சிறியதாக பழங்கால திரையரங்கம் ஒன்றை வடிவமைத்து, அதில் படம் பார்த்து கொரோனா கால பொழுதைகளை ஓட்டி வருகிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மோகன்.

1960-களில் திரையரங்கின் பெயருக்கு மேல் விளக்கு எரியும். கதவுக்கு முன்பு போஸ்டர் ஒட்டி விளக்கு போடப்பட்டிருக்கும். அதைத் தாண்டி திரையரங்கின் உள்ளே சென்றால் வண்ண விளக்குகள் எரியும். அதே பாணியில் குட்டி திரையரங்கை வடிவமைத்து அசத்தியுள்ளார் மோகன்.

இதற்காக இவர் தேடித் தேடி விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி, இந்த மினி தியேட்டரை வடிவமைத்து இருக்கிறார். திரையரங்கு செட்டப்புக்குப் பின்னால் மொபைல் போனில் படத்தை ஓட வைத்து, சினிமா தியேட்டரில் படத்தை பார்ப்பது போன்று ரசனையுடன் கண்டுகளித்து வருகிறார். பழங்காலத் திரையரங்கின் குட்டி வடிவமான இதை, எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்து சென்று ஜாலியாக படம் பார்க்கலாம் எனவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

வேறு யாருக்காவது இதுபோல் தியேட்டர் வேண்டும் என்றால், தான் செய்து தரத் தயராக உள்ளதாக கூறும் மோகன், கண்காட்சி போன்று ஏதாவது போட்டி வந்தால் அதில் தனது மினி திரையரங்கை காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூட்டை பூச்சி தொல்லை, பீடி சிகரெட் நாற்றம் இல்லாத மோகனின் பழங்கால திரையரங்கு கொஞ்சம் டிஃபரண்டான திங்க்கிங்தான்.

வி நியூஸ் 27 செய்திகளுக்காக, புதுச்சேரி செய்தியாளர் கந்தன்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com