நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர்.
இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர். ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறிமுக குழந்தை நட்சத்திரம் ஆர்ணவ் விஜய் பேசுகையில்,'' இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் சூர்யா அங்கிளும், ஜோதிகா ஆன்ட்டியும் தேர்வு செய்தார்கள். ராஜா அங்கிள், சிவக்குமார் தாத்தா, சரோவ் அங்கிள் அனைவருக்கும் நன்றி. தாத்தா, அப்பா என இரண்டு பேருடன் என்னுடைய முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதற்காக 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கூட நடித்தவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தை பாருங்கள். அனைவரும் ஆசி வழங்குங்கள் ஆதரவு தாருங்கள். '' என்றார்.
2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், '' இந்தப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குநர் ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைத்திருக்கிறார். படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் மட்டும் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது.
படத்தில் நடித்த 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான நாய் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்காக இந்தியாவில் யாரும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை. இதற்காக படத்தில் நடித்த சிம்பா என்ற நாய் குட்டியை, குட்டியாகவே வாங்கி இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்தோம். நிறைய கடின உழைப்பும் தேவைப்பட்டது.
இந்த கதையை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்த அருண் விஜய். இந்த படத்தில் ஆர்ணவ் விஜய்யை அறிமுகப்படுத்தியதற்கும், அவருடைய அப்பா விஜயகுமாரை நடிக்க சம்மதிக்க வைத்ததற்கும் நன்றி. மூன்று பேரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொன்னதும் சரி என்று சம்மதம் தெரிவித்தார்கள். இவர்கள் ஒப்புக்கொண்டதால் தான் படம் இந்த அளவிற்கு சிறப்பாக உருவாகி இருக்கிறது.