டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் மாறன். இந்த படம் நேரடியாக நேற்று ஓடிடியில் ரிலீசானது. தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளர் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், ராம்கி, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஸ்மிருதி வெங்கட், அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் ரோலில் தனுஷ் நடித்துள்ளார் என கூறப்பட்டதால் கோ படம் மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் படத்தை பார்க்க காத்திருந்தனர். விறுவிறுப்பான பத்திரிக்கையாளர் பற்றிய படத்தை எதிர்பார்த்த அனைவருக்கும் மாறன் படம் ஏமாற்றத்தையே தந்துள்ளது. ஒரு முழு படத்தை பார்த்த திருப்தி ஏற்படுவதற்கு பதிலாக, பல படங்களில் இருந்து சீன்களை எடுத்து இரண்டு மணி நேர படமாக பார்த்த உணர்வே ஏற்பட்டது.
இசையில் துவங்கி சீன்கள் வரை பல பழைய படங்களை நினைவுபடுத்திச் சென்றது. படத்தில் தனுஷை ஒரு முழுமையான பத்திரிக்கையாளராக காட்ட தவறி விட்டனர். அதோடு முன்னுக்கு பின் முரணான வசனங்கள் அனைவரையும் குழம்ப வைத்துள்ளது. படத்தின் துவக்கத்திலேயே தனுஷின் அப்பாவான ராம்கி நேர்மையான, தைரியமாக பத்திரிக்கையாளராக காட்டப்படுகிறார். உண்மையை உள்ளபடி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்கிறார்.
அதே சமயம் செகண்ட் ஆஃப்பில் வரும் அமீர், தனுஷிடம், பத்திரிக்கையாளர் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா. நீங்கள் போடும் ஒரு செய்தியால் ஒருவருடைய குடும்பமே பாதிக்கப்படும் என நினைக்க மாட்டீர்களா என கேட்கிறார். போலி ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தேர்தலில் பயன்படுத்த நடக்கும் சதி பற்றி தனுஷ் செய்தி போட்டததால் அவருடைய குடும்பத்தில் நடக்கும் பாதிப்பிற்காக அமீர் இப்படி பேசுவதாக ஒரு டயலாக் வைக்கப்பட்டுள்ளது. இவர் இப்படி பேசும்போது தனுஷ் ஏதோ தவறு செய்தவரை போல கூனி குறுகி நிற்கிறார்.
டைரக்டர் கார்த்திக் நரேன் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை. பத்திரிக்கையாளர்கள் உண்மையை எழுத வேண்டும் என்கிறாரா அல்லது எழுத கூடாது என்கிறாரா. தனுஷ் மீதும் அவருக்கு என்ன கோபம் என தெரியவில்லை. எதற்காக பணம் செலவழித்து இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என தெரியவில்லை.