திரைப்பட நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சங்க துணைத்தலைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன், ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்று விவேக் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நடிகர் விவேக்கின் கனவான ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை விவேக் பசுமை கலாம் அமைப்பு மூலம், தாம் தொடர இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் செல் முருகன் தெரிவித்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன், ஒரு விழிப்புணர்வு படத்திற்குகாக விவேக்கை அணுகும் போது, எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்து கொடுத்தார். தனி மனிதனாகவும் தமிழனாகவும் 33 லட்சம் மரக்கன்றுகள் நட்டது பெரிய விஷயம்.
நடிகர் விவேக் இறக்கவில்லை. நம்முடன் தான் வாழ்கிறார். மக்கள் அனைவரும் கார்பன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அனைவரும் மரங்கள் நட்டு பூமியை காப்பாற்ற வேண்டும். அதை தொடர்ந்து பேசிய திரைப்பட நடிகர் சங்கத் துணைத் தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன், விவேக் தன்னுடைய நல்ல நண்பர்.
நல்ல படைப்பாளி மட்டுமல்ல படிப்பாளியும் கூட. அரசு பணியில் அவர் தொடர்ந்திருந்தால், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகியிருப்பார். விவேக், பத்ம ஶ்ரீ பட்டம் பெற்ற போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக நினைவுகூர்ந்தார்.
விவேக் வசித்த இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் என பெயர் வைக்க வேண்டும் என வைத்த கோரிக்கை குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தார்.