ஒரு நடிகராக, விஜய் ஆண்டனியின் திரைப்பயணம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. அவரது படங்கள் அடுத்தடுது பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதில், வர்த்தக வட்டாரங்கள் அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்பையும் கொண்டாடுகின்றன.
அவரது நடிப்பில், தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்ட, கிட்டத்தட்ட அரை டஜன் திரைப்படங்கள் 2022ல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தின் கொல்கத்தா ஷெட்யூல், இப்போது இனிதே நிறைவடைந்துள்ளது.
வெளிநாட்டில், சில பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், படத்தின் மற்ற பகுதிகளின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
CS அமுதன், இப்படத்திற்கான விஜய் ஆண்டனியின் புதிய லுக்கை வெளியிட விருப்பமில்லை, இன்னும் காலம் இருக்கிறது என தெரிவித்திருப்பது, படத்தின் மீதும், விஜய் ஆண்டனியின் புதிய தோற்றத்தின் மீதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
காமெடி கலக்கலில் வந்த "தமிழ்ப் படம்" மூலம் புகழ் பெற்ற CS அமுதன், தனித்துவமான வகையில், முற்றிலும் புதிய களத்தில் திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் என்டர்டெய்னராக "ரத்தம்" படத்தை உருவாக்குகிறார்.
இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு "ரத்தம்" திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.
கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.