சமூக வலைத்தளங்களை சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதில் அடிக்கடி சில பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டிவிடும் சம்பவம் தொடர்கதையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வரிசையில் தற்போது ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
ஸ்காட்டிஷ் நடிகரான இவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்தும், அதனை திரும்ப மீட்டெடுத்த சம்பவம் குறித்து நடிகர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்ட டீவீட்டில், 'அனைவருக்கும் வணக்கம், நேற்று எனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது, மீண்டும் இந்த சேவையை தொடங்க உதவிய ட்விட்டர் மற்றும் குழுவிற்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண நபர்களின் சமூக வலைதள பக்கங்களை கூட இப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான பிரேவ்ஹார்ட், டிராய் மற்றும் வொண்டர் வுமன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்காட்டிஷ் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார்.
72 வயதான இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் தான் இவருக்கு தமிழில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.