இளையராஜாவின் இசைக்கச்சேரி ராக் வித் ராஜா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. முதல் முறையாகத் தமிழ்நாடு சுற்றுலா இந்த நிகழ்ச்சிக்காக இடத்தைக் கொடுத்திருந்தது. பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தனுஷ், கங்கை அமரன் உட்பட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். வான வேடிக்கை முழங்க, ரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தனர். சரியாக 7.20 மணிக்கு இளையராஜா மேடைக்கு வந்து தனது ஜனனி ஜனனி பாடலோடு ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து இளமை இதோ..இதோ. மாமன் வூடு மச்சு வூடு, ராக்கு முத்து ராக்கு, நிலாவே வா, மேகம் கொட்டட்டும், என் உள்ளே போன்ற பாடல்கள் ஒலித்தன. எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடலை சரணும், மனோவும், பாடினார்கள். ஆனால் அந்த இடத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. எஸ்.பி.பி., லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் இடையே இளையராஜா பேசியதாவது,என் பால்ய சினேகிதன் பாலு இந்த நேரத்தில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அநியாயமாக கொரோனாவால் இறந்து விட்டார். வள்ளி படத்தில் இடம் பெற்ற என்னுள்ளே பாடலைக்கேட்டுக் கைதட்டினீர்கள். அந்த பாடல் அவ்வளவு அழகாக இருக்கக் காரணம் ரஜினிகாந்த் என்னிடம் கதையை அப்படி அழகாக விளக்கினார்.
அவரை ஒரு நடிகராக நான் பார்த்திருக்கிறேன். அவருக்குள் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் இருந்ததை நான் அன்றுதான் பார்த்தேன். நல்ல கதாசிரியர் ரஜினி. என்று புகழ்ந்து பேசிவிட்டு
தனுஷ் எழுந்து நில்லு இந்தப் பாடல் இவ்வளவு அழகாக வர உன் மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்டு ரசிகர்கள் கரகோசம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் எண்பதுகளின் மெலடி பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்தார் இளையராஜா.